தமிழகத்தில் 10 மாதங்களில் விபத்துகள் 15 சதவீதம் குறைவு-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
தமிழகத்தில் 10 மாதங்களில் விபத்துகள் 15 சதவீதம் குறைந்துள்ளது என்றும், எனவே நமது செயல்பாட்டினை மத்திய அரசு பின்பற்றுகிறது என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
மதுரை, மார்ச்.26-
தமிழகத்தில் 10 மாதங்களில் விபத்துகள் 15 சதவீதம் குறைந்துள்ளது என்றும், எனவே நமது செயல்பாட்டினை மத்திய அரசு பின்பற்றுகிறது என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கலைஞர் நூலகம்
மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.114 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், தமிழரசி, கலெக்டர் அனிஷ்சேகர், பொதுப்பணித்துறை (கட்டிடம்) தலைமைப் பொறியாளர் ரகுநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக 5 முறை பொறுப்பேற்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய கருணாநிதியின் நினைவினை போற்றும் வகையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி மாதம் 11-ந் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த நூலக கட்டிடம் தரைத்தளத்துடன் சேர்த்து 6 மாடி கட்டிடமாக, மொத்தம் 2 லட்சம் சதுரடியில் கட்டப்படுகிறது. தரைத்தளத்திற்கு கீழ் உள்ள கீழ்தளத்தில் வாகன காப்பகம் அமைக்கப்படுகிறது. தரைதளத்தில், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அமர்ந்து படிக்கின்ற வகையில் தேவையான புத்தகங்கள், இருக்கைகள் ஏற்டுத்தப்படும். மேலும், 250 பேர் அமரக்கூடிய கலையரங்கம் கட்டப்படுகிறது.
நகரும் படிகட்டுகள்
முதல் தளம், குழந்தைகள் நூலக பகுதியாகும். இங்கு 20 ஆயிரம் புத்தகங்கள், தினசரி நாளிதழ், வார, மாத பத்திரிகைகளை வாசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2-வது தளத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்கள் மற்றும் ஆய்வகம் அமைக்கப்படும். மேலும் இந்த தளத்தில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படும். 3-வது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ் இலக்கியப்பகுதி அமைக்கப்படுகிறது. 4-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 5-வது தளத்தில் அரியவகை நூல்களும் வைக்கப்படும். 6-வது தளத்தில் பார்வையற்றோர் கற்று அறிவதற்காக டிஜிட்டல் மையம் அமைக்கப்படும்.
இந்த நூலகம் முழுவதிலும் குளிரூட்டப்பட்ட வசதி ஏற்படுத்தப்படும். மேலும் தொடுதிரை வசதி, ஜெனரேட்டர் வசதி, நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகளும் செய்யப்படுகின்றன. நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
சுங்கச்சாவடிகள்
கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு கட்டிடங்கள் பராமரிப்புக்கு குறைந்த நிதியே ஒதுக்கினார்கள். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது பராமரிப்பிற்கான நிதியை கூடுதலாக ஒதுக்கி உள்ளார். எனவே அரசு கட்டிடங்கள் புதுப்பொலிவு பெறும். நான் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய கோரிக்கையை கூறினேன். குறிப்பாக நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருந்து 10 கிலோமீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது என்ற விதி உள்ளது. அந்த விதியை மீறி சென்னையில் இருக்கிற 5 சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
தமிழக அரசின் வலியுறுத்தலை தொடர்ந்துதான் தற்போது மத்திய அரசு, நாடு முழுவதும் 60 கிலோ மீட்டருக்கு இடையே உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடன், நான் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளை அழைத்து தமிழகத்தில் எங்கெங்கு சுங்கச்சாவடிகள் எடுக்கப்பட வேண்டும் என்ற பட்டியலை தயார் செய்யுங்கள் என்று கூறி உள்ளேன்.
விபத்துக்கள் குறைவு
கடந்த காலங்களில் தமிழகத்தில் மிக மோசமான அளவில் விபத்துக்கள் நடந்தன. ஆனால் முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்காக பல்வேறு ஆலோசனை வழங்கினார். அதன் அடிப்படையில் அதிக விபத்து நடக்கிற நாமக்கல், செங்கல்பட்டு, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து விபத்து தடுப்பு நடவடிக்கை எடுத்தோம். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்கரி, தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் 15 சதவீத விபத்துக்களை குறைத்து இருக்கிறார்கள். அது எப்படி என்பதனை தெரிந்து கொண்டு மத்திய அரசும் அதனை பின்பற்றும் என்று நற்சான்றிதழ் தந்தார்.
பழனி-கொடைக்கானல்-மூணாறு வழித்தடத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, மேயர் முத்து மேம்பாலம் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவனியாபுரம் பெருங்குடி சாலையில் 250 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.