நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 132 ஏரிகள், 1,219 குளம், குட்டைகள், 672 வரத்து வாய்க்கால்கள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அறிவுறுத்தலின்படி, மேற்படி நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பான 2 முழு குடியிருப்பு அகற்றப்பட்டது. மேலும், நாரணமங்கலம் கிராமத்தில் கருப்புடையார் ஏரி, குரும்பாபாளையம் கிராமத்தில் பில்லாலையம் குளத்தில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளான பயிர் செய்யப்பட்டு அறுவடை முடிந்த நிலையில் இருந்த 2 விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி அகற்றப்பட்டது. நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து மாவட்டம் முழவதும் நடைபெறும் என்றும், மீண்டும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா எச்சரித்துள்ளார்.