பொதுமக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி
பொதுமக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள் நல்லூரில் பழங்குடியின மக்கள் தற்போது குடியிருக்கும் இடத்திற்குக் குடிமனை பட்டா மற்றும் அடிப்படை வசதி கேட்டு மீன்சுருட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பாக தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களை அமைதி பேச்சுவார்த்தைக்காக ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து பேசினர். அப்போது, பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை வசதி, குடிநீர் வசதி, மயானத்திற்கு பாதை வசதி, தற்போது குடியிருந்து வரும் இடத்திற்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதனை கேட்ட தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக ெதரிவித்தனர். மேலும் இளையபெருமாள் நல்லூர் கிராமத்தில் மின்விளக்கு வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும், இதைத்தொடர்ந்து தற்காலிகமாக மயானத்துக்கு கிராவல் மண் அடித்து மண் சாலை அமைத்து தரவும், குடிநீர் வசதி, குடிமனை பட்டா உள்ளிட்ட வசதிகளை படிபடிப்பாக ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போராட்டத்தை கட்சியினர் தற்காலிகமாக ஒத்திவைத்தனர். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.