இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
காரையூர் அருகே இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 36). இவரது மனைவி மாரியம்மாள் (25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மாரியம்மாள் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை அடித்து கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டதாக கூறி இறந்த மாரியம்மாளின் உறவினர்கள் மேலத்தானியம்-காரையூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாரியம்மாள் சாவுக்கு இளையராஜா, அவரது அண்ணன் மனைவியான கமலா, இளையராஜாவின் தங்கை தவமணி ஆகிய 3 பேர் தான் காரணம், அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் மாரியம்மாளின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததுடன் இளையராஜா, கமலா, தவமணி ஆகிய 3 பேரையும் கைது செய்யக்கோரி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லில்லிகிரேஸ் (டவுன்), அப்துல்ரகுமான் (பொன்னமராவதி), கணேஷ் நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் காரையூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கணவர் கைது
அப்போது இளையராஜாவுக்கும், கமலாவுக்கும் இடையே பழக்கம் இருந்த நிலையில், அதன் காரணமாக குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், மாரியம்மாளை கொடுமை செய்து கொலை செய்ததாகவும், அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறினர். மேலும் அதுவரை மாரியம்மாளின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர். போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையில் இளையராஜாவை கைது செய்துவிட்டதாகவும், கமலா, தவமணி ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும், அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமரசமடையவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
போராட்டம் நீடித்து வந்தநிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கண்டிப்பாக 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதற்கு தற்போது மறியல் போராட்டத்தை கைவிடுவதாகவும், 2 பெண்களையும் கைது செய்யும் வரை மாரியம்மாளின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறினர். இதையடுத்து மாலை 6 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர். மாலை 3.20 மணிக்கு தொடங்கி சுமார் 2½ மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலை கைவிட்ட பின் போக்குவரத்து சீரானது.