நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-03-25 19:59 GMT
தஞ்சாவூர்:
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
சுவாமிமலை விமல்நாதன்:- மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், காவிரி சமவெளி மாவட்டங்களின் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் டெல்லி சென்று ஜனாதிபதி, பிரதமர், காவிரி கண்காணிப்பு ஆணையரிடம் அளிப்பதுடன், சுப்ரீம்கோர்ட்டிலும் முறையிட வேண்டும்.
தஞ்சாவூர் கண்ணன்:- உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் நூற்றுக்கணக்கான ஏரிகள் பாசனம் பெற்று விவசாயம் நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே 2 வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- கோடைகாலம் தொடங்கிவிட்டதால் மின்வாரியத்தில் மின்மாற்றிகளை அதிகஅளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உளுந்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
தூர்வாரும் பணி
தஞ்சாவூர் செந்தில்குமார்:- தூர்வாரும் பணிகளை ஏப்ரல், மே மாதம் தொடங்கி உடனே பணிகளை முடிக்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 கிடைக்கும் வகையில் நெல்லுக்கான ஊக்கத்தொகையை மாநிலஅரசு அறிவிக்க வேண்டும்
அம்மையகரம் ரவிச்சந்தர்: எந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழகஅரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.
காலிப்பணியிடம்
மதுக்கூர் சந்திரன்: மதுக்கூர் ஒன்றியத்தில் ள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை மரக்கன்றுகளை அதிகம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
கீழக்கோட்டை தங்கவேல்: நீர்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்