கலைஞர் நூலகத்தில் அமையும் வசதிகள்

விருதுநகர் - பாத்திபனூர் வரை சாலையை அகலப்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும், மதுரை கலைஞர் நூலகத்தில் அமைய உள்ள வசதிகள் குறித்தும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

Update: 2022-03-25 19:42 GMT
விருதுநகர், 
விருதுநகர் - பாத்திபனூர் வரை சாலையை அகலப்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும், மதுரை கலைஞர் நூலகத்தில் அமைய உள்ள வசதிகள் குறித்தும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார் 
சாலை பணி 
விருதுநகர் மாவட்டத்தில் 18 மாநில நெடுஞ்சாலைகள் 338 கி.மீ. நீளத்திற்கும், 24 மாவட்ட முக்கிய சாலைகள் 303 கி.மீ. நீளத்திற்கும் செயல்திறன் அடிப்படையிலான 5 ஆண்டு கால பராமரிப்பு ஒப்பந்த திட்டத்தின்கீழ், 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இத்திட்டத்தின் கீழ் நான்காவது வருட பணியில், சாத்தூர் - சிவகாசி - கழுகுமலை சாலை காலமுறை புதுப்பித்தல்பணியின் கீழ்  ரூ.64.12 லட்சம் மதிப்பில்  1 கி.மீ தூரம் முடிவுற்ற சாலை பணிகளின் தரத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
பின்னர் அவர் நிருபா்களிடம் கூறியதாவது:-
 விருதுநகர் மாவட்டத்தில் 4 ெரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவற்றில் ராஜபாளையத்தில் ரூ.46 கோடி மதிப்பில் ஒரு  ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சிவகாசி மற்றும் சாத்தூர் ெரயில் நிலையங்களுக்கு இடையே 3 மேம்பாலங்கள் கட்டுவதற்கான நில எடுப்பு பணிகளுக்கு ரூ.45.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில், 4 புறவழிச்சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக பார்த்திபனூர் வரை உள்ள சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின் போது கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ. சீனிவாசன், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துைற அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர்கள் சாலை ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டனர். 
கண்காட்சி 
 விருதுநகர்-ராமமூர்த்தி ரோட்டில் தனியார் திருமண அரங்கில் 75-வது சுதந்திர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைப்போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியும், பல்துறை பணி விளக்க கண்காட்சியும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இதில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகரசபைத்தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி, நகரசபை கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
இதனை தொடர்ந்து விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இதில் ஏ.ஆர். ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., நகரசபைத் தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி நிர்வாகக் குழு செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 
கலைஞர் நூலகம்
மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.114 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை அமைச்சர்கள்  எ.வ.வேலு, பெரியகருப்பன், மூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக 5 முறை பொறுப்பேற்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய கருணாநிதியின் நினைவினை போற்றும் வகையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி நடத்தப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த நூலக கட்டிடம் தரைத்தளத்துடன் சேர்த்து 6 மாடி கட்டிடமாக, மொத்தம் 2 லட்சம் சதுரடியில் கட்டப்படுகிறது. தரைத்தளத்திற்கு கீழ் உள்ள கீழ்தளத்தில் வாகன காப்பகம் அமைக்கப்படுகிறது. தரைதளத்தில், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அமர்ந்து படிக்கின்ற வகையில் தேவையான புத்தகங்கள், இருக்கைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 250 பேர் அமரக்கூடிய கலையரங்கம் கட்டப்படுகிறது.
நகரும் படிகட்டுகள்
முதல் தளம், குழந்தைகள் நூலக பகுதியாகும். இங்கு 20 ஆயிரம் புத்தகங்கள், தினசரி நாளிதழ், வார, மாத பத்திரிக்கைகளை வாசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2-வது தளத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்கள் மற்றும் ஆய்வகம் அமைக்கப்படும். மேலும் இந்த தளத்தில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படும். 3-வது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ் இலக்கியப்பகுதி அமைக்கப்படுகிறது. 4-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 5-வது தளத்தில் அரியவகை நூல்களும் வைக்கப்படும். 6-வது தளத்தில் பார்வையற்றோர் கற்று அறிவதற்காக டிஜிட்டல் மையம் அமைக்கப்படும்.
இந்த நூலகம் முழுவதிலும் குளிரூட்டப்பட்ட வசதி ஏற்படுத்தப்படும். மேலும் தொடுதிரை வசதி, ஜெனரேட்டர் வசதி, நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகளும் செய்யப்படுகின்றன. நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்