உலகமே பாராட்டும் அளவுக்கு முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் உள்ளது அமைச்சர் காந்தி பேச்சு

உலகமே பாராட்டும் அளவுக்கு முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் உள்ளது என்று அமைச்சர் காந்தி கூறினார்.

Update: 2022-03-25 19:39 GMT
ராணிப்பேட்டை,
 
உலகமே பாராட்டும் அளவுக்கு முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் உள்ளது என்று அமைச்சர் காந்தி கூறினார்.

கண்காட்சி தொடக்க விழா

ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், 75-வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, விடுதலை போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க 7 நாள் கண்காட்சி தொடக்க விழா ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, கண்காட்சியை திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார். 

அப்போது அவர் பேசியதாவது:-

உலகமே பாராட்டும் அளவுக்கு
இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளூர் போராட்ட தியாகிகளைப் போற்றும் வகையில் மாவட்டந்தோறும் கண்காட்சி அமைக்க தமிழக முதல்-அமைச்சர் ஆணை யிட்டு அதன் மூலம் அனைத்து தரப்பினரும் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்து உள்ளார். இந்த மாதிரியான சிந்தனைகள் அடங்கிய முதல்வரை வேறெங்கும் பார்க்க முடியாது. 
அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகமே பாராட்டுகின்ற அளவுக்கு தமிழக முதல்வரின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள் உள்ளது. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பல புதிய திட்டங்களை செயல்படுத்துகிறார். அதேபோன்று மாணவிகளை தொடர்ந்து படிக்க வைக்க மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தொடங்க உள்ளார். தற்போது மக்களுக்கான அரசு செயல்படுகின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவி

நிகழ்ச்சியில் ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய சுதந்திர வரலாறு குறித்த மாவட்ட அளவில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 9 மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சியும் நடந்தது.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட திட்ட அலுவலர் நானிலதாசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட் ரமணன், ராணிப்பேட்டை நகர மன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.அசோக் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்