ரூ.4 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே உப்பாற்றில் 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

Update: 2022-03-25 19:37 GMT
செம்பட்டு, மார்ச்.26-
திருச்சி மொராய்ஸ் சிட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே உப்பாற்றில் 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு
திருச்சி கிழக்கு தாலுகாவுக்குட்பட்ட கொட்டப்பட்டு கிராமம் மொராய்ஸ் சிட்டியில் 47 சென்ட் பரப்பளவு உள்ள ரூ.4 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான தரிசு புறம்போக்கு நிலத்தை ஜே.எஸ்.லொரான் மொராய்ஸ் என்பவரால் 350 சதுர மீட்டர் பரப்பளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.
அதாவது சுமார் 3 அடி உயரத்திற்கு கான்கிரீட் தளம் அமைத்து அதன் மேலே புல் தரை உருவாக்கி புல் தரையின் நடுவே கிரானைட் மேடை அமைத்து அதன் மீது செப்கோ பிரோப்போரைட்ஸ் என எழுதப்பட்டு அமைக்கப்பட்டு அதன் மேலே 'மொராய்ஸ் சிட்டி' என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை வருவாய் துறையினர் கண்டறிந்தனர்.
நிலம் மீட்பு
மேற்படி ஆக்கிரமிப்பை அகற்ற உரிய படிவம் -7 மற்றும் படிவம் -6 சார்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பினை அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புதாரர்கள் தரப்பில் தானாக முன்வந்து ஆக்கிரமிப்பினை அகற்றிக் கொள்ளாத காரணத்தினால் நேற்று திருச்சி கிழக்கு தாசில்தார் கலைவாணி தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டது.
திருச்சி கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மற்றும் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் ஆகியோர் மேற்காணும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை மேற்பார்வையிட்டனர். மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. முடிவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.4 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர்
இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே ஓமாந்தூரில் உப்பாறு உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த உப்பாற்றில் சுமார் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன், பொதுப்பணித்துறை அரியாறு உதவி செயற்பொறியாளர் முருகேசன், மண்ணச்சநல்லூர் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

மேலும் செய்திகள்