மேட்டமலை கூட்டுறவு மேலாண்மை வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
சாத்தூர் அருகே மேட்டமலை கூட்டுறவு மேலாண்மை வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தூர்,
தமிழக அரசு 5 பவுன் வரை நகை அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை சங்கத்தில் தொழில் செய்யவும், விவசாயத்திற்கு என நகை அடமான கடன் 800 பேருக்கு வழங்கியுள்ளனர். நேற்று முதல் தகுதியான நபர்களுக்கு நகையை பெற்றுச்செல்ல கூட்டுறவு வங்கி ஊழியர்கள் டோக்கன் வழங்கி வந்தனர். அதில் நகையை அடமானம் வைத்து கடன் பெற்று அதற்கான வட்டியை கட்டிய 448 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் நகை தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி தள்ளுபடி கிடைக்காதவர்களிடம் மனுவாக எழுதி வாங்கி வங்கி செயலாளர் ராமசாமியிடம் வழங்கினார். இதில் பெறப்பட்ட மனுக்கள் அரசுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.