தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான பொதுகழிவறை
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வேலாயுதம்பாளையம் ஹைஸ்கூல்மேடு பகுதியில் ஆண்,பெண் இருபாலருக்கான பொது கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து பயனற்று போனது. தொடர்ந்து கழிவறை முழுவதும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம், கரூர்.
சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
திருச்சி உறையூர் ஹவுசிங் யூனிட் பகுதிக்கு தினமும் 10 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றத்துடன் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உறையூர், திருச்சி.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
திருச்சி மாவட்டம், துறையூர் நகரிலிருந்து பெரம்பலூர் சாலையை இணைப்பதற்கு துறையூர் நகருக்குள் செல்லாமல் கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை மூலமாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலையோரம் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துறையூர், திருச்சி.
ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னையில் இருந்து மதுரைக்கு தாம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடு வழியாக வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தினந்தோறும் சென்று வருகிறது. இந்த ரெயில் அரியலூருக்கு அடுத்ததாக திருச்சியில் மட்டுமே நிற்கிறது. இதனால் ஸ்ரீரங்கம் பகுதியை சுற்றியுள்ள ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊர். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் ஸ்ரீரங்கத்தில் ரெயில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நடேசன், புத்தனாம்பட்டி, திருச்சி.
குடிநீர் குழாயில் உடைப்பு
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே திண்டுக்கல்- திருச்சி தார் சாலையின் அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் வெளியேறி வரும் குடிநீரால் சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
குண்டும், குழியுமான தார் சாலை
திருச்சி வாசன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள் சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரியதர்ஷினி, வாசன் நகர், திருச்சி.