தியாகதுருகம் அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
தியாகதுருகம் அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே பீ.தாங்கள் கிராமத்தில் 53 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை அதே பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து நில அளவையர் ஜெயவேல் தலைமையில் வருவாய்த்துறையினர் ஏரி ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர்.
தொடர்ந்து நேற்று தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், இந்திராணி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட ஏரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பாதுகாப்பு கேட்டு தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கடிதம் கொடுக்கப்பட்டதோடு, தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்ததாகவும் ஆனால் பாதுகாப்புக்கு போலீசார் யாரும் வரவில்லை என அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் கீதா மணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.