வேலூர் மாவட்டத்தில்கூடுதல் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
வேலூர் மாவட்டத்தில் கூடுதல் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கூடுதல் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து பேசினார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
நெல் கொள்முதல் நிலையங்கள்
குடியாத்தம் பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அவற்றால் ஏற்கனவே சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகளவு நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அதேபோன்று வேலூர் மாவட்டத்தில் கூடுதல் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். குறிப்பாக குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், ஊசூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தால் விவசாயிகள் மிகவும் பயன் அடைவார்கள்.
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நெல் அறுவடை, கரும்பு வெட்டும் சமயத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் யாருக்கும் வேலை வழங்கக்கூடாது. அவர்களுக்கு 2 மாதங்கள் விடுமுறை வழங்க வேண்டும்.
கால்நடைகளுக்கு மொபைல் வேன் வசதி
வேலூர் மாவட்டத்தில் யூரியாவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், விற்பனை செய்பவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். ஆன்லைனில் பதிவு செய்த விவசாயிகளுக்கு முறைகேடு இல்லாமல் மானிய விலையில் டிராக்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு தாலுகாதோறும் மொபைல் வேன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பேரணாம்பட்டு மலட்டாற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் கலெக்டர் கூறுகையில், அணைக்கட்டு தாலுகாவில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், சோழவரம் ஆகிய 3 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. ஊசூரிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க சாத்தியக்கூறுகள் இருந்தால் ஆலோசித்து செயல்படுத்தப்படும்.
இதேபோன்று மற்ற இடங்களிலும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். அதன்பின்னர் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்படும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உரம் இருப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை காமதாமதமின்றி அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.