நாமக்கல்லில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

Update: 2022-03-25 17:51 GMT
நாமக்கல்:
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இதில் நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் 4 வருடங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு வங்கியில் தட்டுப்பாடின்றி உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர். 
ஏற்றுமதி
மேலும் வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர், வெங்கரை, பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்காலில் சாக்கடை நீர் கலக்காமல் இருக்க சுத்திகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குனர் அருண்பாலாஜி, தோட்டக்கலை துணை இயக்குனர் கணேசன், நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்