போக்சோ சட்டத்தில் வாலிபர்கள் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
பாலியல் தொல்லை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் ஆற்றங்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகுரு மகன் கார்த்திக் (வயது 28). இவர் கடந்த 4 மாதங்களாக பிளஸ்-1 படித்து வரும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்தநிலையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று கார்த்திக் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். உடனே கார்த்திக் சிறுமியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமி, மயிலாடுதுறை மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
14 வயது சிறுமி
இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்கென்னடி மகன் கார்த்திக் (வயது 22). நேற்று முன்தினம் 14 வயது சிறுமி கடைக்கு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த கார்த்திக் தனியாக நடந்து சென்ற சிறுமியை வழிமறித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைக் கண்ட கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.