ரோடு மாமந்தூரிலிருந்து சோமண்டார்குடி வழியாக கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ரோடு மாமந்தூரில் இருந்து சோமண்டார்குடி வழியாக கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்

Update: 2022-03-25 17:35 GMT
கள்ளக்குறிச்சி

குறைகேட்புகூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 

நிலுவைத்தொகை

அரியபெருமானூர் விவசாயி குருநாதன் பேசும்போது கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனம் கள்ளக்குறிச்சி நகரம் வழியாகச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரோடுமாமந்தூரிலிருந்து சோமண்டார்குடி, ஏர்வாய்ப்பட்டினம் வழியாக சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும். சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயி சாயின்ஷா மூடப்பட்ட கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதற்கு கலெக்டர் நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்கிட சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

நீர்நிலை ஆக்கிரமிப்பு

விவசாயிகள் ஸ்டாலின் மணி, ஜெயராமன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் ஏரி மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு சென்னை ஐக்கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளபடி கள்ளக்குறிச்சி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களைக்கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் நபர்கள்மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயி ஜோதிராமன் கரும்புக்கான வெட்டுக்கூலியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை வாயிலாக கரும்பு வெட்டும் எந்திரம் வழங்கிட கேட்டுக்கொண்டார். இதற்கு விவசாயிகளுக்கு ஏற்படும் அதிகமான செலவை குறைத்திடும் பொருட்டு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடப்பாண்டிற்கு கரும்பு வெட்டும் எந்திரம் வாயிலாக கரும்பு வெட்டும் பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  கூறினார்.

அரசு நலத்திட்டங்கள்

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் கையிருப்பில் உள்ளன. வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினம்மாலா, துணை இயக்குனர் (வேளாண்மை திட்டம்) சுந்தரம் மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்