கோவில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு: நெசவுத்தொழிலாளி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
புதுச்சத்திரம் அருகே கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் நெசவுத்தொழிலாளி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
நாமக்கல்:
கத்திக்குத்து
புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு நெசவுத்தொழிலாளி குணா (வயது 22), மதுபோதையில் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, செல்வராஜ் உள்பட சிலர் குணாவிடம் கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், குணாவின் வயிற்றில் குத்தினார். மேலும் இதை தடுக்க வந்த கட்டிட மேஸ்திரியான வினோத்தையும் கத்தியால் குத்தினார். இதில் குணா, வினோத் படுகாயம் அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
அங்கிருந்த சிலர் சுப்பிரமணியை சரமாரியாக தாக்கினர். பின்னர் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுச்சத்திரம் அருகே கோவில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.