கோவில் திருவிழாவில் கொலை; கைதான 56 பேரும் விடுதலை
கோவில் திருவிழாவின் போது நடந்த கொலை வழக்கில் 56 பேரை விடுதலை செய்து திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.
திண்டுக்கல்:
திருவிழாவில் தகராறு
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி பகுதியில் இருதரப்பினருக்கு இடையே வழிபாட்டு தலங்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி ஒரு தரப்பினர் சார்பில் கோவில் திருவிழா நடத்தப்பட்டது.
அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஆண்டி (வயது 45) படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
61 பேர் கைது
இது தொடர்பான புகாரின் பேரில் சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன், பாஸ்கர், குழந்தைராஜ், ஞானசேகர், பீட்டர் உள்பட 61 பேரை கைது செய்தனர். இதற்கிடையே சிகிச்சையில் இருந்த ஆண்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மோதல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். மீதமுள்ள 56 பேர் மீதான வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது.
விடுதலை
இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதி சரவணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு, எதிர்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.
விசாரணையின் முடிவில் 56 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 56 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றம் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. எனவே 56 பேரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.