பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
விழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள வாழப்பட்டு மாரியம்மன் கோவில் பின்புற பகுதியில் நேற்று ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த வருவாய் ஆய்வாளர் லட்சுமிநாராயணன், உடனே இதுபற்றி விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், ஏட்டுகள் பாண்டியன், மணிமாறன் ஆகியோர் வாழப்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 80 சாக்கு மூட்டைகளில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி மூட்டைகளை யாரோ மர்ம நபர்கள், பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.