திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு 472-ம் ஆண்டாக தீமிதி திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி அன்று முதல் எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையாம்பாளையம், நாப்பாளைய தெரு, காகுப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களால் உள்ளூர் உற்சவம் நடைபெற்றது.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் இறங்கி பயபக்தியுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன் பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.