பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 32 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகள்
மணல்மேடு பேரூராட்சியில் பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
மணல்மேடு:
மணல்மேடு பேரூராட்சியில் பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மணல்மேடு பேரூராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 150 குடும்பங்களுக்கு அட்டையும், வருவாய் துறையின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா 16 பேருக்கும், மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை 25 பேருக்கும், வேளாண்மைத்துறை சார்பில் 6 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளும், தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு மாங்கன்றுகளையும், ரூ.9 லட்சத்து 32 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் 201 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுவதை போன்று பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் சார்பில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக மாவட்டத்திற்கு ஒரு பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.75 லட்சத்தில் 3 நீர்நிலைகளில் தூர் வாரும் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மணல்மேட்டில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அடையாள அட்டை
தமிழகத்தை முதல்-அமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கல்விக்கு என பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக மகளிருக்கு இலவச பஸ் பயணம் திட்டம் இன்று நாடு முழுவதும் பாராட்டப்பட்டு வருவதாகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழக முதல்-அமைச்சர் தொலைநோக்கு சிந்தனையுடன் எல்லோருக்கும் எல்லா திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் மணல்மேடு பேரூராட்சியில் 1,905 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1,755 குடும்பங்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. இன்று (நேற்று) 150 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.
தூய்மையான பேரூராட்சியாக
இந்த திட்டத்தின் மூலம் மணல்மேடு பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன இலுப்பப்பட்டு, ராதாநல்லூர் ராஜசூரியன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளம் மற்றும் வடிகாலை ஆழப்படுத்தி தூர்வாரி சீரமைக்கப்பட உள்ளன. பேரூராட்சி பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, தங்கு தடையின்றி செய்து தரப்படும் எனவும் மணல்மேடு பேரூராட்சியில் நிறைய பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.48 லட்சம் செலவில் பேவர் பிளாக் போடும் பணியும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன.
தூய்மையான பேரூராட்சியாக மணல்மேடு பேரூராட்சி மாற்றப்படும். மேலும் சார்பதிவாளர் அலுவலகம் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மணல்மேடு பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் பார்க் கொண்டுவருவதற்கு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இங்குள்ள நூற்பாலை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி அறிவடிவழகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.