சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான வாலிபர்களுடன் தொடர்பு குழந்தையை கொன்ற தாய் பற்றி பகீர் தகவல்கள்

ஊட்டியில் குழந்தையை கொன்ற தாய் பற்றி பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான வாலிபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-03-25 16:51 GMT
ஊட்டி

ஊட்டியில் குழந்தையை கொன்ற தாய் பற்றி பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான வாலிபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு வயது குழந்தை கொலை 

நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து கார்த்திக் நித்தீசுடன், கோவையிலும், கீதா நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும் வசித்து வந்தார். கணவரை பிரிந்த கீதா ஏராளமானோரிடம் பழகி உள்ளார். இதற்கு ஒரு வயது குழந்தை இடையூறாக இருந்ததால் அந்த குழந்தையை மூச்சுத்திணறடித்து கொலை செய்து உள்ளார். 

போலீசார் விசாரணை

இது குழந்தையின் உடலை உடற்கூறு செய்ததில்தான் தெரியவந்தது. இதையடுத்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவை கைது செய்தனர். தொடந்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். 

அதில்தான் அவர் பலரிடம் உல்லாசமாக இருப்பதற்கு ஒரு வயது குழந்தை இடையூறாக இருந்ததால் அந்த குழந்தையை கொலை செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் மேலும் சில பகீர் தகவல்களும் கிடைத்து உள்ளன. 

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:- 

பலருடன் தொடர்பு

கீதா, ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து உள்ளார். அவர் 3-வதாக கார்த்திக்கை காதலித்து மணமுடித்தார். அவருக்குதான் இந்த 2 குழந்தையும் பிறந்து உள்ளது. அதன் பின்னர் கீதாவின் வாழ்க்கை முறை மாறியது.

 அவருக்கு மேலும் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த கார்த்திக் அவரை கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை கீதா பிரிந்தார். 

பின்னர் அவர் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு மேலும் பலருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் பலருடன் உல்லாசமாக இருந்து உள்ளார். இதற்காக அவர்களை தங்களது வீட்டிற்கும் வரவைழத்து உள்ளார். 

தினமும் ஒருவருடன் உல்லாசம்

இதன் காரணமாக வாடகை வீட்டின் உரிமையாளர் கீதாவை கண்டித்து உள்ளார். இதனால் அவர் அடிக்கடி தனது வீட்டையும் மாற்றி இருக்கிறார். மேலும் சமூகவலைதளத்தில் வாலிபர்களின் செல்போன் எண்களை தேடி அவர்களை தொடர்பு கொண்டு தினமும் தனது வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். 

இவ்வாறு அடிக்கடி அவர் வெளியே சுற்றியதால் குழந்தையை கவனிக்க முடியாமல்போனது. அத்துடன் அந்த குழந்தை அவருக்கு இடையூறாகவும் இருந்து உள்ளது. இதனால் அடிக்கடி குழந்தைக்கு மதுபானம் ஊற்றி தூங்க வைத்துவிட்டு வெளியே செல்வதை வழக்கப்படுத்தி இருந்துள்ளார். 

தூங்காததால் ஆத்திரம்

இந்த நிலையில் சம்பவத்தன்று ஒரு நபரை வீட்டிற்கு அழைத்து உள்ளார். அந்த நபர் வந்ததும் அவருடன் வெளியே ஜாலியாக செல்ல முடிவு செய்து, தனது குழந்தைக்கு உணவு கொடுத்து அதை தூங்க வைக்க முடிவு செய்தார். அதன்படி குழந்தைக்கு உணவு கொடுத்து உள்ளார். ஆனால் அது சாப்பிடாமல் அடம் பிடித்து அழுதது. 

இதனால் ஆத்திரம் அடைந்த கீதா, அந்த குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து உணவை வாயில் திணித்தார். அத்துடன் அதற்கு மதுவும் அதிகமாக குடிக்க கொடுத்து உள்ளார். மேலும் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி இருக்கிறார். 

தலை சுவற்றில் மோதியது

அப்போதும் குழந்தை தூங்காமல் அழுதுகொண்டே இருந்துள்ளது.  இதனால் கோபத்தால் உச்சிக்கு சென்ற கீதா, இன்னும் அதிகமாக உணவு கொடுத்து வேகமாக தொட்டிலை ஆட்டி உள்ளார். 

அப்போது குழந்தையின் தலை சுவற்றில் வேகமாக மோதியதுடன் அதற்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டு மயங்கியது. அதன் பின்னர் குழந்தை இறந்துவிட்டது என்பதை உறுதி செய்த கீதா, அக்கம் பக்கத்தினரை நம்ப வைப்பதற்காக பதறியடித்தபடி குழந்தையை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று நாடகமாடினார். 

அங்கு குழந்தை இறந்துவிட்டது என்று டாக்டர்கள் சொன்னாலும், அதன் மீது காயம் இல்லாததால் சாதாரண சாவு என்றும் நம்ப வைத்து உள்ளார். 

30 பேரிடம் விசாரணை

குழந்தை இறந்துவிட்டதால் எந்த இடையூறும் இல்லாததால் தினமும் பலருடன் சுற்றி உல்லாசமாக இருந்து உள்ளார். அவருடன் உல்லாசம் அனுபவித்த சிலர் பணமும் கொடுத்ததால் அதில் ஜாலியாக வாழ்ந்து இருக்கிறார். 

எனவே இந்த குழந்தையின் கொலைக்கு அவருடன் தொடர்பில் இருந்த 30-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினோம். அதில் குழந்தை கொலையில் யாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்து உள்ளது. இருந்தபோதிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்