வடுவூர் பகுதியில் காய்கறிகள் விலை குறைந்தது

வடுவூர் பகுதியில் காய்கறிகள் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-03-25 16:46 GMT
வடுவூர்;
வடுவூர் பகுதியில் காய்கறிகள் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
காய்கறிகள்
மனித வாழ்க்கையில் அன்றாடம் தேவைப்படுவது காய்கறிகள். ஏதோ ஒரு காரணத்தால் மற்ற பொருட்கள் விலை உயர்ந்தால் வாங்காமல் தவிர்த்து விடலாம். ஆனால் காய்கறிகளின் விலை உயர்ந்தாலும் அதை  வாங்கி தீர வேண்டிய அவசியம் உள்ளது.
வருடத்தின் சில மாதங்கள் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ எட்டியது. இதனால் மக்கள் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 
வெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கமே தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 
விலை குறைவு
தற்போது எப்போதுமே விலை கூடுதலாக காணப்படுவது கேரட், காலிபிளவர் போன்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரூ.120-க்கு விற்ற தக்காளி படிப்படியாக விலை குறைந்து தற்போது ரூ.10-க்கு விற்கப்படுகிறது. 
எப்போதும் விலை உயர்வாக காணப்படும் காலிபிளவர் கிலோ ரூ.32-க்கும், கேரட் ரூ40-க்கும் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.26-க்கும், பெரிய வெங்காயம் ரூ.24-க்கும், முள்ளங்கி ரூ.16-க்கும், பாகற்காய் ரூ.24, பீர்க்கங்காய் ரூ.24, வாழைக்காய் ரூ.22, சேனைக்கிழங்கு ரூ.28, பீன்ஸ் ரூ.38, உருளைக்கிழங்கு ரூ.28-க்கும் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது. 
பெட்ரோல்- டீசல் விலை உயர்வு
பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தால்  அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வு உடனடியாக வெளிப்படுவது காய்கறிகளில்தான். தற்போது பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் போதும் காய்கறிகளின் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இதுகுறித்து காய்கறி கடை உரிமையாளர் கரிகாலன் ராஜா கூறியதாவது 
மழைக்காலத்தில் காய்கறி செடிகள் பாதிக்கப்படுவதால் காய்கறிகள் விலை உயரும். வெயில் காலத்தில் காய்கறி விலைகள் குறைந்து விடும். தற்போது கடுமையான வெயில் காணப்படுவதால் காய்கறிகளை கடைகளில் வைத்து இருந்தால் அடுத்த நாளே வாடி வதங்கி விடும். இதனால் வியாபாரிகளும் உடனடியாக விற்று தீர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். வெயில் காலம் முழுவதும் இதே விலை நீடிக்கவே வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்