நகைக்கடன் தள்ளுபடியில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டு இருந்தால் மனு கொடுக்கலாம்
நகைக்கடன் தள்ளுபடியில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டு இருந்தால் மனு கொடுக்கலாம் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:-
நகைக்கடன் தள்ளுபடியில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டு இருந்தால் மனு கொடுக்கலாம் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
நகை கடன் தள்ளுபடி
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர்கள் சித்ரா, முத்தையன், வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ள நகைக்கடனில் ஏழை எளிய குடும்பங்களைக் சேர்ந்த பலர் விடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக துறை அதிகாரிகள் மீண்டும் நேரடி விசாரணை நடத்தி விடுபட்டவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு கிராம ஊராட்சி பகுதியிலும் நெல் அடிக்கும் களம் அமைத்து தர வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களில் வருவாய்க்கான ஆதாரமின்றி உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நிலுவைத்தொகை
தடங்கம் முதல் ஜருகு வரை உள்ள பகுதிகளில் நெல் கடலை பயிர்களை காட்டுப்பன்றிகள் அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன. இதை தடுக்க மின் வேலி அமைத்து விவசாய பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலை வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்து பேசினார்கள்.
விண்ணப்பிக்க அவகாசம்
கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் பொதுவாக பெறப்பட்ட நகை கடன்கள் 19 விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆய்வின் அடிப்படையில் தள்ளுபடி பெற தகுதி உடையவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் தகுதியுடையவர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதி துணைப்பதிவாளர்களிடம் மனுக்களை அளிக்கலாம்.
கோட்ட அளவில்
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையில் உதவி கலெக்டர் அலுவலகங்களில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டங்களில் கோட்ட அளவில் விவசாயிகளின் குறைகள் கோரிக்கைகள் கேட்டு அறியப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் கோட்ட அளவில் அதிகாரிகள் அல்லது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனர். இதில் அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.