பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த தடுத்ததை கண்டித்து காந்தலில் பொதுமக்கள் சாலை மறியல்
பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த தடுத்ததை கண்டித்து காந்தலில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டி
பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த தடுத்ததை கண்டித்து காந்தலில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுக்கழிப்பிடம்
ஊட்டி நகராட்சியில் 10-வது வார்டுக்கு உட்பட்ட காந்தலை அடுத்த ஸ்லெட்டர் ஹவுஸ் பகுதியில் பராமரிப்பு இல்லாத பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த கழிப்பிடத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கழிப்பிடத்தை அருகே உள்ள 25-வது வார்டில் வசித்து வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மகளிர் சுயஉதவிக் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தடுத்து உள்ளார்.
பொதுமக்கள் சாலைமறியல்
அத்துடன் கழிப்பிடத்தை பராமரிக்க ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.50 கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் கழிப்பிடத்தை பயன் படுத்த முடியும் என்றும் கூறியதாக தெரிகிறது. அத்துடன் அவர் சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது.
எனவே அந்த நபர் மீது நடவடிக்ைக எடுப்பதுடன், பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த தடுத்ததை கண்டித்தும், அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காந்தல் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது சம்பந்தப்பட்ட கழிப்பிடத்தை நகராட்சி நிர்வாகம் பராமரிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.