கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 7 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-03-25 16:40 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மூதாட்டி 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பச்சகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னபாப்பா (வயது 82).  இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அடுத்த ஜபேதார்மேடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (46). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர் 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா குசிமலைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜி (25). இவர் ஓசூரில் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் பொருத்தமானபெண் கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்த ராஜி ஓசூரில் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் பேகேப்பள்ளி கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (19). தனியார் நிறுவன ஊழியர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்ப தகராறு
சூளகிரி அருகே உள்ள தியாகரசனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன் (35). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்ப தகராறு இருந்தது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (60). இவர் கடந்த 23-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூலித்தொழிலாளி
ஊத்தங்கரை நாகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (54). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்