2 ஆண்டுகளுக்கு பின்னர் ஊட்டியில் மலர் கண்காட்சி மே மாதம் நடக்கிறது

ஊட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற மே மாதம் மலர் கண்காட்சி நடக்கிறது.

Update: 2022-03-25 16:40 GMT
ஊட்டி

ஊட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற மே மாதம் மலர் கண்காட்சி நடக்கிறது.

குழு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். 

அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசன் மற்றும் கண்காட்சிகள் நடைபெறவில்லை. 

தற்போது தொற்று பரவல் மிகவும் குறைந்து உள்ளது. நடப்பாண்டில் கோடை சீசனை முன்னிட்டு மலர் மற்றும் பழக்காட்சி குழு கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில்  நடைபெற்றது.

ஆலோசனை

கூட்டத்துக்கு தமிழக தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். கலெக்டர் எஸ்.பி.அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மே மாதம் வார விடுமுறை நாட்களில் கண்காட்சிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதனை நடத்துவதற்கான தேதிகள், காட்சி ஏற்பாடுகள் மற்றும் வரவு, செலவு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றி செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

124-வது மலர் கண்காட்சி

நீலகிரியில் கடந்த 2 ஆண்டுகள் கோடை சீசன் நடைபெறவில்லை. நடப் பாண்டில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கோடை விழா, கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. 

இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகவும் பிரபலமான 124-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

 அதன் படி கோத்தகிரி நேரு பூங்காவில் மே 7, 8-ந் தேதிகளில் 11-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 13, 14, 15-ந் தேதிகளில் 9-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 14, 15-ந் தேதிகளில் 17-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 28, 29-ந் தேதிகளில் 62-வது பழ கண்காட்சி நடைபெறுகிறது. 

கவர்னருக்கு அழைப்பு

நடப்பாண்டில் மிகச் சிறப்பாக கண்காட்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு  அழைப்பு விடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்