கோத்தகிரி அருகே கோடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;

Update: 2022-03-25 16:39 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 

கோடநாடு காட்சிமுனை

மலைமாவட்டமான நீலகிரியில் பார்த்து மகிழ பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சிமுனையும் ஒன்று. கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 6,500 அடி உயரத்தில் இருக்கும் கோடநாடு காட்சிமுனை பகுதியில் இதமான காலநிலை நிலவுவதால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். 

இங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்க காட்சி கோபுரம், தொலை நோக்கி கருவி வசதியும் வைக்கப்பட்டு உள்ளது. 

இதன் மூலம் சமவெளி பகுதியில் இருக்கும் பவானிசாகர் அணை, பவானி ஆறு, தெங்குமரஹாடா கிராமம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள், ரங்கசாமி மலைச்சிகரம், அங்குள்ள அழகிய நீர்வீழ்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்கிறார்கள். 

சுற்றுலா பயணிகள் 

தற்போது இங்கு இதமான காலநிலை நிலவி வருவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. அவர்கள் அங்கு வந்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சிலர் அங்கு குடும்பத்து டன் நின்று புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டனர். 

மேலும் அங்கு வைக்கப்பட்டு உள்ள அரியவகை பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாசாரம் குறித்த படங்களையும் அவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள்.

 குறிப்பாக கோத்தகிரியில் பெய்த மழை காரணமாக அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது. அதையும் சுற்றுலா பயணிகள் கண்டு கழித்து வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது கோடநாடு காட்சிமுனை களைகட்டி உள்ளது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- 

விளையாட்டு பூங்கா

கோடநாடு காட்சிமுனை பகுதியில் உள்ள இயற்கை காட்சிகள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு காட்சி கோபுரம், புகைப்படங்கள் கூடிய ஒரு அறை ஆகியவை மட்டுமே இருக்கிறது. இங்குள்ள காலநிலையை அனுபவிக்கதான் பலர் இங்கு வருகிறார்கள். 

இதனால் இங்கு குழந்தைகள் விளையாட விளையாட்டு பூங்கா ஒன்று அமைத்தால் இன்னும் அழகாக இருக்கும். அதை செய்தால் சுற்றுலா பயணிகளும் அதிகம்பேர் வருவார்கள். எனவே அதை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்