ஓசூரில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய ரூ30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது உடந்தையாக இருந்த புரோக்கரும் சிக்கினார்
ஓசூரில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உடந்தையாக இருந்த புரோக்கர் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
ஓசூரில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உடந்தையாக இருந்த புரோக்கர் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சாப்ட்வேர் என்ஜினீயர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து, உட்பிரிவு செய்து தர, அப்பகுதி சர்வேயர் வடிவேல் என்பவரை அணுகினார். இந்த பணிக்காக, வடிவேல் தனது புரோக்கரான தமீஸ் என்பவர் மூலம் ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.
அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று ஹரிநாத் தெரிவித்தார். இதையடுத்து ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புரோக்கர் கூறினார். இது குறித்து ஹரிநாத் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து சர்வேயர் வடிவேலிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.
சர்வேயர் கைது
இந்த நிலையில் நேற்று, ஓசூர் பாகலூர் சாலையில் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வடிவேலின் வீட்டுக்கு ஹரிநாத் சென்று பணத்துடன் சென்றார். அவரை பின்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று மறைந்து இருந்தனர். வீட்டுக்குள் சென்ற ஹரிநாத், பணத்தை வடிவேலிடம் கொடுத்தார். பணத்தை வடிவேல் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுல்தான் தலைமையிலான போலீசார், வடிவேலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சர்வேயரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து வடிவேலுவுக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் தமீசையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.