நகைக்கடன் தள்ளுபடிக்கான டோக்கன் வாங்க முண்டியடித்த பயனாளிகள்
கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கான டோக்கன் பெற பயனாளிகள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.;
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டுவில் தேனி வேளாண் விளை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழக அரசு அறிவித்தபடி நகைக்கடன் தள்ளுபடிக்கு 524 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நேற்று முன்தினம் முதல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் 100 பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு நகைகள் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் 2-ம் நாளான நேற்று காலை ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு குவிந்தனர். அப்போது டோக்கன் வாங்குவதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டுறவு பணியாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். உடனே இதுகுறித்து அவர்கள் கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்த போலீசார், பயனாளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து மாலை வரை போலீஸ் பாதுகாப்போடு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைகள் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கடமலைக்குண்டுவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.