முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது.
கடந்த சில மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டமும் குறைந்து வந்தது. கடந்த சில வாரங்களாக அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றது.
இதற்கிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 124.90 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது. இந்தநிலையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று 125 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 329 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெரியாறு அணை பகுதியில் 10.41 மில்லிமீட்டரும், தேக்கடியில் 2.6 மில்லிமீட்டரும் மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.