மின்வாரியம், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

மின்வாரியம், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Update: 2022-03-25 16:05 GMT
தேனி:
மின்வாரியம், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மின்வாரியத்தில் லஞ்சம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3 மாத இடைவெளிக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
தமிழக அரசு விவசாய பயன்பாட்டுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. ஆனால் இலவச மின் இணைப்பு பெற தேனி மின்வாரிய அலுவலகத்துக்கு விவசாயிகள் சென்றால் அங்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்த ஆதாரங்கள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தினால் ஆதாரங்களை கொடுக்க தயாராக இருக்கிறோம்.
இதேபோல், வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. அந்த திட்டத்தில் விவசாயிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ரூ.250 வீதம் பயணப்படி வழங்குவதற்காக கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் பயணப்படி வழங்கவில்லை.
மரங்கள் பாதுகாப்பு
தேனி மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் இணைந்து மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை, பதாகைகளை 3 ஆண்டுகளாக அகற்றி முன்மாதிரியாக திகழ்கின்றனர். ஆனால், அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆணிகளை சிலர் அடித்து மரங்களை காயப்படுத்துகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், அவர்கள் மீது அரசின் எந்த துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே மரங்களில் ஆணி அடித்து பதாகைகள் தொங்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மரங்களை பாதுகாக்க வேண்டும்.
தேவதானப்பட்டி அருகே ஏ.வாடிப்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் பெறுகின்றனர். லஞ்சம் பெறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். நாட்டுமாடு இனமான தேனி மலைமாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கலெக்டர் உத்தரவு
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த பிறகு கலெக்டர் பேசும்போது, "மின்வாரியத்தில் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் கூறிய புகார் மீது உரிய விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் அலுவலர்கள் மீது 3 நாட்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். இதுதொடர்பான அறிக்கையையும் 3 நாட்களில் எனக்கு சமர்ப்பிக்க வேண்டும். மரங்களில் ஆணிகள் அடித்து காயப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பின்னர் கூட்டத்தில் மரங்களில் ஆணிகள் அடித்து மரங்களை காயப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாம் தமிழர் கட்சி தேனி நகர செயலாளர் இமயம், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் பாண்டி, தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிராஜ், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வித்யா, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்துலட்சுமி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்