லாரிகள் மோதி தீப்பிடித்ததில் டிரைவர் கருகி சாவு
பெங்களூரு அருகே லாரிகள் மோதி தீப்பிடித்ததில் டிரைவர் உடல் கருகி பலியானார்.;
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா விஜயபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் 2 லாரிகள் சென்று கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் முன்னால் சென்ற லாரியை, மற்றொரு லாரியின் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது முந்தி செல்ல முயன்ற லாரி மோதியது. இதனால் 2 லாரிகளும் மோதிக் கொண்டதுடன் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது. பின்னர் திடீரென்று 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. ஒரு லாரியின் டிரைவர் முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே வந்தார். ஆனால் மற்றொரு லாரியின் டிரைவர் வெளியே வரமுடியாமல் தவித்தார். இதனால் அவரது உடலில் தீப்பிடித்தது.
உடனே அங்கிருந்தவர்கள் டிரைவராக காப்பாற்ற முயன்றனர். ஆனால் தீ, மளமளமென லாரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் பொதுமக்களால் லாரியின் அருகே செல்ல முடியவில்லை. தகவல் அறிந்ததும் விஜயபுரா போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து 2 லாரிகளிலும் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தார்கள். ஆனாலும் அதற்குள் டிரைவர் உடல் கருகி பலியானார். பின்னா் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், உடல் கருகி பலியான டிரைவர் சி்க்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி அருகே கோட்டபள்ளி கிராமத்தை சேர்ந்த வசந்த்குமார் (வயது 28) என்று தெரிந்தது. மற்றொரு லாரி டிரைவரின் பெயர் வேலு ஆகும். படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 2 லாரிகளும் ஆந்திராவில் இருந்து சிமெண்டு செங்கல்லை ஏற்றிக் கொண்டு பெங்களூரு, மைசூருவுக்கு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து விஜயபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.