கோவை
கோவை பீளமேடு அருகே உள்ள வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் கயல்விழி. கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டு பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை திருடி விட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதில் சிலர் அந்த வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்று விட்டு, ஒரு வாடகை காரில் தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் பீளமேடு போலீசார், 60 பவுன் கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 40), சென்னையை சேர்ந்த ஹரிஹரன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் நகைகளை மீட்டனர். இதில் தொடர்புடைய மாணிக்கராஜ் என்பவரை தேடி வந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்வெளியானது. இதில் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதான பிரபல திருடர்களான முருகானந்தம், ஹரிஹரன் ஆகியோருடன் மாணிக்கராஜூம் திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்துள்ளனர். இதில் ஒருவருக்கொருவர் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது 3 பேரும் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து அவர்கள் வெளியே வந்ததும், பூட்டியிருக்கும் வீடுகள் குறித்து ஒருவருக்கொருவர் தகவல் கொடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதற்கிடையில் மாணிக்கராஜை மதுக்கரை பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் மதுக்கரை போலீசார் கைது செய்தனர்.இவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து 60 பவுன் கொள்ளை வழக்கில் மாணிக்கராஜை காவலில் எடுத்து விசாரிக்க பீளமேடு போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.