மாணவர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மங்களக்குடி அருகே உள்ள கவலைவென்றான் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 95 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று 87 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். இந் நிலையில் மாலை 3.45 மணி அளவில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் திடீரென வாந்தி வருவதாகவும் வயிற்றுவலி இருப்பதாகவும் ஆசிரியர்களிடம் கூறியுள்ளான். அதனைத் தொடர்ந்து மேலும் சில மாணவ-மாணவிகளும் தங்களுக்கும் வாந்தி, மயக்கம் வருவதாக கூறியுள்ளனர். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை மங்கலக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவர்கள் சிலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இந்த தகவல் பரவியதும் கவலை வென்றான் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களையும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டாக்டர் எட்வின் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மாணவர்களின் உடல்நிலை சீராக இருந்ததை தொடர்ந்து பெற்றோர்களோடு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பிரியதர்சினி, சினேகா,கிதியோன், ஆபியா ஷகான் ஆகிய 4 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு உள்ளனர். அவர்களும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவின் பேரில் திருவாடனை தாசில்தார் செந்தில் வேல் முருகன் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார்.அதனை தொடர்ந்து அவர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் சத்துணவு பிரிவு நேர்முக உதவியாளர் லீலா, துணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் ரவீந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, வாட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவலக் கண்ணன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அதிமுக முன்னால் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து மாணவ, மாணவிகளிடம் உடல்நலம் குறித்தும் மதிய உணவு பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர். அதன்பிறகு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கவலைவென்றான் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கல்வி அதிகாரிகள் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பள்ளியில் பணியில் இருந்த தலைமை ஆசிரியர் (பொறுப்பு) உஷா மற்றும் ஆசிரியர்களிடமும் விவரங்களை கேட்டறிந்தனர். மாணவர்கள் பரிசோதனைக்கு பின்னர் நேற்று பள்ளியில் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலிக்கு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜான்பீட்டர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.