ரெயில்வே மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு; சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

ரெயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

Update: 2022-03-25 14:35 GMT
பேச்சுவார்த்தை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கும், கவரைப்பேட்டை ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள ஒரு ரெயில்வே கேட்டிற்கு மாற்றாக குருத்தானமேடு-பண்பாக்கம் யூனியன் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைத்திட திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரெயில்வே மேம்பால பணியினால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக பண்பாக்கம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட மேம்பால பணி தொடர்பாக பண்பாக்கத்தை சேர்ந்த கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான சமாதானக்கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூச்சல், குழப்பம்

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது ரெயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக பண்பாக்கம் கிராம மக்களிடம் இதுவரை கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை என்றும், எந்த புல எண் வழியாக ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது என்பதற்கான விவரம் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தின் வழியே ரெயில்வே மேம்பாலம் அமைந்தால் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படும் என புகார் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

இந்த கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில் பங்கேற்றதற்கான ஒப்புகை பெயர் பட்டியலில் யாரும் கையெழுத்து போடாமல் அங்கிருந்து கலைந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்