காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரியில் மாணவ, மாணவிகள், பங்கேற்ற காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
தர்மபுரி:-
தர்மபுரியில் மாணவ, மாணவிகள், பங்கேற்ற காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காசநோய் இல்லா தமிழகம்
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைதொடர்ந்து காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், காசநோயை அறவே ஒழித்து காசநோய் இல்லா உலகை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். காசநோயின் ஆரம்ப அறிகுறிகளான இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், சளியில் இரத்தம் வருதல் ஆகியவை தென்பட்டால் அவர்களுக்கு காசநோய் பற்றி எடுத்து சொல்லி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும். காசநோய் இல்லா தமிழகம்-2025 என்ற இலக்கினை அடைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார்.
மாணவ- மாணவிகள்
விழிப்புணர்வு ஊர்வலத்தில் துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி பாரதிபுரம் வரை சென்றடைந்தது. இதில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, காசநோய் துணை இயக்குனர் ராஜ்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தொழுநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.