காஞ்சீபுரம் அருகே 3 டன் செம்மரக்கட்டைகள் சிக்கின

காஞ்சீபுரம் அருகே 3 டன் பாலீஸ் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்ததையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வன சரக துறையினருக்கு தகவல் அளித்தார்.

Update: 2022-03-25 14:05 GMT
காஞ்சீபுரத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை அருகே நேற்று அதிகாலை உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வளாகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

டிரைவர், கிளீனர் என யாரும் லாரியில் இல்லாததால் சந்தேகப்பட்ட நெல் மண்டி வியாபாரிகள் லாரியில் ஏறி பார்த்தபோது செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து தானிய வியாபாரிகள் சங்கத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 45 கிலோ எடை உள்ள 64 பாலீஸ் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்ததையடுத்து அவர் வன சரக துறையினருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் காஞ்சீபும் மாவட்ட வனசரக அலுவலர் ராமதாஸ், வனக்காப்பாளர் ஆதித்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாலுச்செட்டிச்சத்திரம் போலீஸ்துறையினரிடம் இருந்து உத்தரபிரதேச மாநில கன்டெய்னர் லாரியையும், செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி வன இலாகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

இந்த செம்மரக்கட்டைகளை ஆய்வு செய்த பின்னரே இதனுடைய மதிப்பீடு என்ன என்று தெரிவிக்க இயலும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்