பால் வியாபாரி வெட்டிக் கொலை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில்பட்டியில் மனைவி கண் முன்னே பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுெதாடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-25 13:46 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மனைவி கண் முன்னே பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பால் வியாபாரி 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் மணி (வயது 50). இவர் வீரவாஞ்சி நகர் 9-வது தெரு பகுதியில் தொழுவம் அமைத்து மாடுகளை பராமரித்து, பால் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு நயினார் என்ற மகனும், முத்துப்பேச்சி என்ற மகளும் உள்ளனர்.
நேற்று மாலை மணி தனது மனைவி பேச்சியம்மாளுடன் மாட்டில் பால் கறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தொழுவத்துக்கு வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் பேச்சியம்மாள் கீழே இறங்கி தொழுவத்துக்கு சென்றார்.

வெட்டிக்கொலை
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், திடீரென வந்து மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தன் கண் முன்னே இறந்த கணவரின் உடலை பார்த்து பேச்சியம்மாள் கதறி அழுதார்.
போலீசார் விரைந்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?
கங்கைகொண்டான் வடகரை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த மணி கடந்த ஆண்டு தான் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மனைவி கண் முன்னே பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்