‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-25 13:38 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் கே.திருக்குமரன். இவர், பொட்டல்புதூர் பஞ்சாயத்து இந்திராகாலனி தெருவில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை சுற்றிலும் அமைந்து இருந்த நல்லிகள் பழுதாகி உள்ளதாகவும், இதனால் மோட்டாரை இயக்கும்போது அதில் இருந்து வரும் தண்ணீர், தொட்டியில் நிரம்பாமல் வீணாக வெளியேறுவதாகவும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக தண்ணீர் தொட்டியை சுற்றிலும் புதிதாக நல்லிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

குண்டும் குழியுமான சாலை
நெல்லை மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள பொதிகை நகரில் இருந்து கனரா வங்கி காலனிக்கு செல்லும் அப்துல் கலாம் 100 அடி சாலை குண்டும் குழியுமாக மண் சாலையாகவே உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். மழைக் காலத்தில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களால் நடந்து செல்ல முடியாது. எனவே, சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- ஜெகநாதன், கனரா வங்கி காலனி.

புழுதி பறக்கும் சாலை
ராதாபுரம் தாலுகா செட்டிகுளம் பஞ்சாயத்து பண்ணையூர் வழியாக அஞ்சுகிராமம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. ஆனால், சாலையை முழுவதுமாக சீரமைக்காமல் பள்ளங்களில் எம்.சாண்ட் மணல் (கிரஷர் பொடி) கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுயம்புலிங்கம், செட்டிகுளம்.

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா ஊத்துமலையில், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள ஆண்கள் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே, அதனை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பாபா, ஊத்துமலை.

ஆபத்தான மின்கம்பம்
சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் பஞ்சாயத்து புன்னைவனப்பேரி கிராமத்தில் அங்கன்வாடி மையம் அருகே அமைந்துள்ள மின்கம்பத்தில் காங்கிரீட் பெயர்ந்துள்ளது. எனவே, ஆபத்தான அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- வனராஜ், புன்னைவனப்பேரி.

பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகில் சிறுப்பாடு கிராமத்தில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டிக்கு சாயர்புரத்தில் இருந்து குழாய் வழியாக தாமிரபரணி ஆற்று தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வருடமாக தண்ணீர் தொட்டி எந்தவித பராமரிப்பும் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள், பக்கத்து ஊருக்கு சென்று ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே, அந்த தொட்டியை பராமரித்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இளங்கோ, சிறுப்பாடு.

ஆபத்தான பள்ளம்
உடன்குடியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் வெங்கட்ராமானுஜபுரம்- கடாட்சபுரம் இடையே சாலையின் நடுவே ஆளுயரத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். அதுவரையில் ஆபத்தை உணர்த்தும் சிகப்பு பட்டை கொடி கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- சு.நாராயணன், திருச்செந்தூர்.

மேலும் செய்திகள்