தூத்துக்குடி கஞ்சா வியாபாரி கொலையில் 4 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி கஞ்சா வியாபாரி கொலையில் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.;

Update: 2022-03-25 13:15 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி கஞ்சா வியாபாரி கொலையில் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கஞ்சா வியாபாரி கொலை
தூத்துக்குடி அருகே உள்ள கீழகூட்டுடன்காட்டை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 45). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்த வழக்கு உள்பட 11 வழக்குகள் உள்ளன. 
நேற்று முன்தினம் மாலையில் இவர் சென்னைக்கு செல்வதற்காக தனது மனைவி லட்சுமியுடன் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் திடீரென முத்துப்பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

4 பேர் கைது 
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த கொலை தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (23), தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி (27), புதுக்கோட்டை வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் செல்வகணேஷ் என்ற வடை (22) மற்றும் சண்முக விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, 4 பேரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

பரபரப்பு தகவல்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கைதான லட்சுமணன் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட 11 வழக்குகள் உள்ளன. முத்துப்பாண்டி, லட்சுமணன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 2017-ம் ஆண்டு புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் லட்சுமணனை ஜாமீனில் எடுக்க முத்துப்பாண்டி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், முத்துப்பாண்டியை லட்சுமணன் கொலை செய்ய முயற்சி செய்தார். இதுதொடர்பாகவும் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தங்க சங்கிலி பறிப்பு 
மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட போதும், போலீசின் பிடியில் லட்சுமணன் மட்டுமே சிக்கி வந்துள்ளார். அப்போதும் லட்சுமணனுக்கு முத்துப்பாண்டி உதவவில்லை என்று கூறப்படுகிறது. 
அதேபோன்று லட்சுமணனை முத்துப்பாண்டி அடித்து உள்ளார். அப்போது, லட்சுமணனிடம் இருந்த 1¼ பவுன் தங்க சங்கிலியை முத்துப்பாண்டி பறித்துக்கொண்டார். இந்த நகையை லட்சுமணன் பலமுறை கேட்டும் முத்துப்பாண்டி திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக லட்சுமணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து முத்துப்பாண்டியை கொலை செய்து உள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்