ஆசைக்கு இணங்க மறுத்த துப்புரவு பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல்; ஒப்பந்த நிறுவன மேலாளர் மீது வழக்கு

ஆசைக்கு இணங்க மறுத்த துப்புரவு பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்த நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2022-03-25 13:13 GMT
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வார்டுகளை துப்புரவு செய்வதற்காகவும் பாதுகாப்பு பணிகளுக்காகவும் தனியார் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 290 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த நிறுவன மேலாளராக கபில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 20-ந்தேதி காலை பணிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மேலாளர் கபில் அந்த பெண்மணியை தனது இருசக்கர வாகனத்தில் ஏறுமாறும், எங்கேயாவது சந்தோஷமாக போகலாம் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அந்த பெண் ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற அந்த பெண்மணியை வழி மறித்த சக பெண் ஊழியர்கள் 3 பேர், மேலாளர் கபில் மீது நிலைய மருத்துவ அதிகாரியிடம் அளித்த புகாரை வாபஸ் பெறு. இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரும் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அந்த பெண் செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபில் உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்