ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.17 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.17 கோடி அரசு நிலம் வருவாய் துறை மற்றும் போலீசார் உதவியுடன் 56 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிச்சுவாக்கம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகே அரசுக்கு சொந்தமான 56 ஏக்கர் விவசாய நிலத்தை 50 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து வந்ததாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன், தாசில்தார் ஜெயகாந்தன் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்ததில் 56 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வருவாய் துறையினர் போலீசார் உதவியுடன் 56 ஏக்கர் நிலத்தை மீட்டனர். இதன் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்றும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 17 கோடி என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.