வங்கதேசத்தை சேர்ந்த 7 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை
வங்கதேசத்தை சேர்ந்த 7 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை
திருப்பூர், மார்ச்.26
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டினர் 7 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வங்கதேச நாட்டினர் 7 பேர் கைது
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். மேலும் வங்கதேச நாட்டினர் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. இதுபோன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி பணியாற்றிய வங்கதேச நாட்டினரை திருப்பூர் மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தநிலையில் 15 வேலம்பாளையம் போலீசார் கடந்த 25 8 2021 அன்று உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த அசிசுல் இஸ்லாம்30, மொகிதுர் ரகுமான் 28, அன்வர் ஹூசைன் (வயது 29 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுபோல் கடந்த 29 12 2021 அன்று நல்லூர் போலீசார், வங்கதேச நாட்டை சேர்ந்த பரிதுல் இஸ்லாம் 30, ரிடோய் ஹூசைன் ரபீத் 29, சிமுல் ரகுமான் 28, ராய்கான் 27 ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
2 ஆண்டு சிறை தண்டனை
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 7 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். 7 பேரை அவர்களின் சொந்த நாட்டுக்கு கடத்தவும், தண்டனை காலத்தை அவர்களின் சொந்த நாட்டில் கழிக்கவும் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.
-------