பஸ்சில் மது குடித்த விவகாரம்: பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனை

பஸ்சில் மது குடித்த விவகாரம் தொடர்பாக பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

Update: 2022-03-25 12:36 GMT
மனநல ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் அரசு பஸ்சில் பள்ளி சீருடையுடன் இருந்தபடி மதுகுடிப்பது போன்ற வீடியோ நேற்று முன்தினம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு குழந்தைகள் நல அலுவலர், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சென்று பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்த பள்ளிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பூதூர் வழியாக மாலை நேரத்தில் பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில்தான் மாணவிகள் மது குடித்தார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.

விரிவான விசாரணை

ஓடும் பஸ்சில் மாணவிகள் மது குடித்திருந்தால் கண்டிப்பாக கண்டக்டர் இதுபோன்ற செயல்களை அனுமதித்திருக்கமாட்டார். ஒருவேளை பஸ்சை நிறுத்திவிட்டு கண்டக்டர், டிரைவர் சென்ற பின்னர் மாணவிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்ற செயல்களை தடுக்க பள்ளி கல்வி துறையில் கடுமையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்