சிங்கப்பெருமாள் கோவிலில் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

சிங்கப்பெருமாள் கோவிலில் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது. இது தொடர்பான கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-25 12:20 GMT
ஆண் பிணம்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிங்க பெருமாள் கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்தும் இடத்தில் பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தனர். அப்போது உடல் முற்றிலும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் நபரின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்துபோன நபர் யார்? அவரை யார் அடித்துக்கொலை செய்து கழிவுநீர் தொட்டிக்குள் வீசினார்கள் என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர்.

5 பேர் கைது

இந்த நிலையில் சிங்கப்பெருமாள்கோவில் டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும்படி சுற்றி கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது 5 பேரும் முன்னுக்கு முரணான தகவல்கள் அளித்தனர். இதனையடுத்து 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடந்த நபர் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பட்டரவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது 28) என்பதும் மது குடிக்கும்போது தங்களுடன் ஏற்பட்ட தகராறில் ராஜாவை அடித்து கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த மணி (22), ஒட்ட கார்த்தி (24), சங்கர் (25), சரவணன் (27), விக்னேஷ் (21), ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்