பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் குன்னத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக குழி காணப்படுகிறது. இந்த குழி தோண்டப்பட்டு போடப்பட்டுள்ள மண்ணால் பழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். கண்ணுக்குள் தூசி விழுவதால் குடும்பத்துடன் செல்பவர்கள் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்து விடுகிறார்கள். மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மங்கலம் ரோடு பழக்குடோன் பகுதியில் இருந்து கே.வி.ஆர்.நகருக்கு செல்லும் ரோட்டின் நடுவே கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலமானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ரோட்டின் நடுவே குழி இருப்பதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இந்த குழியில் சிக்கி பல வாகனங்கள் விபத்திற்குள்ளாகியதை தொடர்ந்து இந்த குழியை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல மாதங்களாகியும் இந்த பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதற்கு இடமின்றி சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பாலத்தை இனியாவது சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் இருந்து அய்யன் நகர் செல்லும் வழியில் ரோட்டின் நடுவே பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பணி முடிந்து நீண்ட நாட்கள் ஆகிய பின்னரும் இதற்காக குழி தோண்டப்பட்ட இடமானது சரியான முறையில் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் ரோடு கரடு, முரடாக இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சடுகுடு பயணம் செய்து வருகின்றனர். நீண்ட தூரத்திற்கு ரோடு மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். எனவே, இந்த ரோட்டில் சேதமடைந்து காணப்படும் இடத்தில் தார் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.