களக்காடு அருகே வளர்ப்பு நாய்க்கு கல்லறை கட்டிய டிரைவர் குடும்பம்
வளர்ப்பு நாய்க்கு கல்லறை கட்டிய டிரைவர் குடும்ப சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 56), லாரி டிரைவர். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் தங்கள் வீட்டில் ‘பொம்மி’ என்ற பொமரேனியன் வகை நாயை பாசத்துடன் வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் பொம்மி 3 குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டிக்கு ‘குட்டி’ என்று செல்லப் பெயரிட்டு பாசத்தை கொட்டி வளர்த்தனர். மற்ற இரு குட்டிகளையும் நண்பர்களுக்கு வழங்கி விட்டனர்.
இந்த நிலையில் பொம்மி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை இறந்து போனது. இதனால் மனமுடைந்து கண்ணீர் வடித்த குடும்பத்தினர், அதற்கு கல்லறை கட்டுவது என்று முடிவு செய்தனர். அதன்படி, சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே சத்திரங்காட்டில் உள்ள தங்களது நிலத்தில் பொம்மியை புதைக்க ஏற்பாடு செய்தனர். இறந்தவர்களை அடக்கம் செய்வது போல், மாலை, வாசனை திரவியங்கள் என்று மரியாதை செய்து, புதைத்து கல்லறை கட்டி உள்ளனர். 41-வது நாளில் ெபாம்மியின் படம் பொறித்த கிரானைட் கல்லை கல்லறையில் பதிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கு டிரைவர் குடும்பத்தினர் கல்லறை கட்டி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.