மேகதாது அணை கட்ட எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடக சட்டசபையில் தீர்மானம்

மேகதாதுவில் அணை கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

Update: 2022-03-24 22:18 GMT
பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேகதாது குடிநீர்

இந்த அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என தமிழக அரசு சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசு எக்காரணம் கொண்டும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியது. தமிழக அரசின் இந்த தீர்மானத்திற்கு கர்நாடக சட்டசபையில் கடந்த 22-ந் தேதி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் இதுகுறித்து அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவ எதிர்ப்பு மற்றும் நியாயப்படுத்த முடியாத தீர்மானம் ஆகும். தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படுத்த திட்டமிட்டுள்ள பாசன திட்டங்களை இந்த சபை கவனத்தில் கொண்டுள்ளது.

புதிய அணை கட்ட...

சுப்ரீம் கோர்ட்டு காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில், நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை திருத்தி சாதாரண ஆண்டில் 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தமிழகத்தின் பிலிகுண்டுலுவுக்கு வருவதை உறுதி செய்யும்படி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெங்களூரு நகருக்கு 24 டி.எம்.சி. (4.75 டி.எம்.சி. குடிநீருக்கு) நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நீரை பயன்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடகத்திற்கு சட்டத்திற்கு உட்பட்டு அதிகாரம் உள்ளது. தேசிய நீர் கொள்கையும், குடிநீருக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த திட்டத்தால் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எந்த விதத்திலும் மீறப்படுவது இல்லை.

காவிரி உபரி நீர்

கர்நாடகம் மாநில எல்லைக்குள் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது குந்தா பி.எஸ்.பி., சில்லஹல்லா பி.எஸ்.பி., 2-வது கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டம், வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது சட்டவிரோதமானது.

மத்திய அரசு அறிவித்துள்ள நதிகள் இணைப்பு திட்டத்தில் கோதாவரி உபரி நீரை கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மூலம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நதிகள் இணைப்பு திட்ட அறிக்கையை, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நீர் பங்கீட்டை உறுதி செய்யும் வரை இறுதி செய்யக்கூடாது.

இரட்டை நிலைப்பாடு

கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு தனது ஒப்புதலையும் பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதே நேரத்தில் கர்நாடக அரசின் ஒப்புதலை பெறாமல் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தின் சட்டவிரோதமான திட்டங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

அனைத்து நிலைகளிலும் நாங்கள் அவற்றை எதிர்க்கிறோம்.
மத்திய நீர் ஆணையம், மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல்-வன அமைச்சகம் அனுமதி வழங்குமாறு இந்த சபை வலியுறுத்துகிறது. மேற்கண்ட அம்சங்கள் அடிப்படையில் இத்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அதாவது தமிழக அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத மேகதாது திட்டத்தை எதிர்த்து அந்த மாநில சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை கண்டிக்கிறோம்.

நதிகள் இணைப்பு

மேகதாது திட்டத்திற்கு மத்திய நீர் ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நியாயமான நீர் பங்கீட்டை உறுதி செய்யும் வரை கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே இறுதி செய்ய வேண்டும். 

தமிழகம் சட்டவிரோதமான திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடுமாறு சம்பந்தப்பட்ட மத்திய அரசின் துறைகளை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர் எச்.கே.பட்டீல் சில திருத்தங்களை செய்யுமாறு கேட்டு கொண்டதை அரசு ஏற்றுக்கொண்டது. அதைத்தொடர்ந்து இந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் காகேரி நிறைவேற்றினார்.

மேலும் செய்திகள்