மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்த வழக்கில் உறவுக்கார வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்த வழக்கில் உறவுக்கார வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது
மங்களூரு: மைனர் பெண்ணை மிரட்டி கற்பழித்த வழக்கில் உறவுக்கார வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மிரட்டி கற்பழிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா கணியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது 31). கூலி தொழிலாளி. இவருடைய உறவினரின் மகளான 17 வயது மைனர்பெண், பிரசாத் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசாத், தனியாக இருந்த மைனர்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது.
மேலும் இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் மைனர்பெண், இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பிரசாத், அந்த மைனர்பெண்ணை தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார்.
கைது
இந்த நிலையில் பிரசாத்தின் தொல்லை அதிகரித்து வந்ததால், அந்த மைனர்பெண், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 13-ந்தேதி தனது தாய் மற்றும் சகோதரனிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து உப்பினங்கடி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ]பிரசாத்தை கைது செய்தனர்.
மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக மங்களூரு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். மேலும் போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிவடைந்து நீதிபதி ராதகிருஷ்ணா தீர்ப்பு வழங்கினார். அதில், பிரசாத் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.