வரி செலுத்தாதவர்களின் சொத்துகளை கையகப்படுத்த நடவடிக்கை
வரி செலுத்தாதவர்களின் சொத்துகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி நிதியாண்டு முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், பல கோடி ரூபாய்க்கு மேல் வரியினங்கள் வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் 100 சதவீதம் வரி வசூலில் அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகிறார்கள். மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள், சொத்து வரி, வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை முதல் தவணை, அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை இரண்டாவது தவணையாக வரி செலுத்த வேண்டும்.
தற்போது இரண்டாவது தவணை காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிய உள்ளது. எனவே பொதுமக்கள் வரிகளை எளிதில் செலுத்தும் வகையில், மாநகராட்சி பிரதான அலுவலகம், நான்கு கோட்ட அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் கூறியதாவது:-
ரூ.60 கோடி பாக்கி
சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை மற்ற வரி இனங்கள் என்று சுமார் ரூ.60 கோடி வரி வசூல் ஆகாமல் உள்ளது. இதுவரை 70 சதவீதம் வரி மட்டுமே வசூல் ஆகி உள்ளது. வரி வசூல் மையங்கள் அனைத்து நாட்களும் செயல்படும்.
பொதுமக்கள் வரி செலுத்துவது குறித்து வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் வீட்டு முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கையகப்படுத்த நடவடிக்கை
பொதுமக்கள் உடனடியாக வரியினங்களை செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால், குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என்று பலர் நீண்டகாலம் சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்ட வரி பாக்கி உள்ளவர்களின் சொத்துக்களை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.